காட்டு பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோதவாடி பகுதியில் வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நன்கு விளைந்த இந்த பயிர்களை இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு பன்றிகள் சேதப்படுத்திய வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கு செடிகளை பார்வையிட்டுள்ளனர்.
அப்போது பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காட்டு பன்றிகளால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.