மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் பாகுபலி யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாகுபலி என்ற காட்டு யானை தனியாக சுற்றி வருகிறது. இந்நிலையில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் இந்த யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து பாகுபலி யானையை பிடிப்பதற்காக வெங்கடேஷ், மாரியப்பன், கலீம் என்ற மூன்று கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் கல்லாறு வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த பாகுபலி யானையை கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பிறகு கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்த முயற்சி செய்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் பாகுபலி யானை அங்கிருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. எனவே வனத்துறையினர் தப்பித்துச் சென்ற பாகுபலி யானையை வனப்பகுதியிலிருந்து சமவெளி பகுதிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து கோத்தகிரி சாலையை கடந்து சிறுமுகை வனப் பகுதிக்குள் சென்ற பாகுபலி காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிவடைந்து விட்டது.