புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. பதவிப்பிரமாணத்தின்போது இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என பயன்படுத்தப்பட்ட வார்த்தையை, ஒன்றிய அரசு என திரித்து கூறப்படுவதாக புதுச்சேரி கவர்னரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து அதன்பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதனை ’இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு’ என்கிறார்கள் என்றும், இங்கே ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் இன்றி பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக்கூறுவது கண்டிக்கத்தக்கது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. சில தேவையற்ற சலசலப்புகளால், பலரது தியாகத்தால் உருவான இந்திய இறையாண்மையை குலைக்க முயலவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.