கூலி வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் இரவு வரை காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் குறும்பர், காட்டு நாயக்கர் இன ஆதிவாசி மக்கள் அப்பகுதியில் இருக்கும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இந்த கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருவதில்லை. இதனால் இந்த மக்களிடம் நேரடியாக சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டு கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சுகாதார துறையினர் வருவதை பார்த்ததும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் தலைமறைவாகி விடுகின்றனர். இதனை அடுத்து சுகாதாரத்துறையினர் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு அங்கேயே காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். இவ்வாறு மக்களின் நலன் கருதி காத்திருந்து வனவிலங்குகளின் நடமாட்டம், போக்குவரத்து வசதி இல்லாமல் இருத்தல் போன்றவற்றை சகித்துக்கொண்டு சுகாதாரத் துறையினர் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.