இரணியல் அரண்மனையில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரண்மனையில் 3.85 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, இந்த அரண்மனை நீண்டகாலமாக பராமரிக்கப்படாததால் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே இதனை மறு சீரமைத்து மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் தலைமையில் அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே தற்போது நடைபெற்று வரும் இந்த மறுசீரமைப்பு பணிகளை சரிசெய்து குறிப்பிட்ட கால நேரத்திற்குள் முடிப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீரமைக்கும் பணிகளுக்கு அதிகமாக நிதி தேவைப்பட்டால் முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி மறு சீரமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏ.வி.எம். கால்வாய் நான்கு கட்டங்களாக தூர்வாரப்படும் என்றும் முதலில் குளச்சல் முதல் மண்டைக்காடு வரையிலும், தேங்காப்பட்டணம் முதல் நீரோடி வரையிலும், அளவீடு செய்யும் பணி வருவாய் துறையின் வாயிலாக நடைபெற்று வருகின்றது. இப்பணிகள் முடிவடைந்ததும் மத்திய நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகத்தின் நிதி பங்களிப்புடன், கால்வாயை சுற்றியுள்ள பொதுமக்களின் ஒத்துழைப்போடு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலுள்ள சுற்றுலாத் தளங்களை தொழில் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு ஆய்வு மேற்கொண்டு சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இரணியல் அரண்மனைக்கு உட்பட்ட மார்த்தாண்டேஸ்வரர் குளத்தில் பழுதடைந்துள்ள படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பிரின்ஸ் எம்.எல்.ஏ., உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர் அய்யப்பன், இரணியல் செயல்அலுவலர் சிவகாமிகந்தன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.