புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடனும், முககவசம் அணிந்தும் பொதுமக்கள் கண்டு களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக புராதன சின்னங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் அறிவித்த தளர்வுகளின்படி கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால் பணம் பெற்றுக்கொண்டு நுழைவு சீட்டு வழங்கும் கட்டண மையங்கள் செயல்படும் ஐந்துரதம், கடற்கரைக் கோவில் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள நுழைவுச்சீட்டு கவுண்டர்கள் அடைக்கப்பட்டது. இதனால் இணையதளம் மூலம் 40 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்பின் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் புராதன சின்னங்கள் கண்டு களிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து புராதன சின்னங்கள் திறந்த முதல் நாளில் குறைவான பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். ஆனால் குடும்பம் குடும்பமாக வரும் பயணிகள் கூட்டம் இன்றி கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. எனவே சுற்றுலா வந்தவர்களுக்கு முக்கிய புராதன மையம் நுழைவுவாயில் பகுதியில் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து, முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே புராதன சின்னங்கள் கண்டு களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.