மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள அலங்காரப்பேரி பகுதியில் எம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு அனுஸ்ரீ என்ற மகளும், அசோக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் எம்பெருமாள் அசோக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்தினருடன் தென்கலத்தில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் எம்பெருமாள் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு அலங்காரப்பேரிலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது நான்கு வழி சாலையில் நின்று கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் மிகவும் வேகமாக வந்த கார் ஒன்று திடீரென இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அந்த விபத்தில் முத்துச்செல்விக்கும், அனுஸ்ரீக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் எம்பெருமாளும், அசோக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை அடுத்து அருகிலிருந்தவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த முத்துச்செல்வியையும், அனுஸ்ரீயையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த முத்துச்செல்வி உறவினர்கள் ஒன்று சேர்ந்து கங்கைகொண்டான் காவல்துறையினரிடம் விபத்து ஏற்படுத்திய காரின் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முத்துச்செல்வியின் உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் விபத்து ஏற்படுத்திய காரை சீக்கிரமாக கண்டுபிடித்து அதில் உள்ள கார் டிரைவரின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதன்பின் அந்த இடத்தை விட்டு முத்துச்செல்வி உறவினர்கள் கலைந்து சென்றனர்.