கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு முறையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றதால் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் பொதுமக்கள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்திருந்தார். இந்த டோக்கன் முறை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் 21 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. நாகர்கோவில் பகுதியில் டதி பள்ளி, இந்துக்கல்லூரி, அலோசியஸ் பள்ளி என 3 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. எனவே கலெக்டர் அறிவிப்பின்படி இணையதளத்தில் பெரும்பாலானோர் பதிவு செய்து சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திச் சென்றனர். இதனால் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஆன்லைன் பதிவு செய்ய முயற்சி செய்ததால் டோக்கன் பதிவு செய்யும் முறை முடக்கி வைக்கப்பட்டது.
இதனால் பெருபாலானோர் டோக்கன் பதிவு செய்ய முடியாமல் ஆன்லைன் டோக்கன் இல்லாமல் நாகர்கோவில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் ஆன்லைன் டோக்கன் பெற்றவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டு அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுத்தனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு முகாம்களில் தடுப்பு செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பலர் சிறப்பு முகாம்களில் நின்றபடி தங்களது செல்போன்கள் மூலம் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய முயற்சி செய்தனர். ஆனாலும் பெரும்பாலானோருக்கு டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு அந்தந்த சிறப்பு முகாம்களில் உள்ள அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு நாள் மட்டும் ஆன்லைன் டோக்கன் இல்லாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் முகாம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
அதன்பின் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதன் இடையில் பெரும்பாலானோர் தங்களுக்கு தடுப்பூசி செலுத்த டோக்கன் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவதிலும் நடந்த சிறப்பு முகாம்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில் சில இடங்களில் ஆன்லைன் மூலமாக டோக்கன் கிடைக்காதவர்களுக்கு முதல் நாளான நேற்று டோக்கன் கொடுத்து தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை முன்பதிவு செய்து டோக்கன் பெறுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு நேற்று ஒரே நாளில் 30 முகாம்களில் மொத்தம் 7 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.