விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு பெரிய அளவில் வெடித்து சேதாரத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் விசைத்தறி கூடத்தை திறந்து உள்ளே சென்ற ஆதிநாராயணன் வெடித்த நிலையில் தரையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கண்டு அதிர்ந்து போனார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் வெடித்து கிடந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.