நியாய விலை கடையில் இருக்கும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசிகளை கடத்தி சென்று கூடுதல் விலைக்கு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளின் அரிசியை சில நபர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக கடத்திச் சென்று அங்கே விலை கூடுதலாக விற்பனை செய்வது வருகின்றனர். இது பற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதித்த போது நியாய விலை கடையின் அரிசி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வந்தவரை விசாரித்த போது அவர் இம்மாவட்டத்தை சேர்ந்த பாரதிதாசன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருடன் ராஜேஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இணைந்து வெளி மாநிலத்திற்கு நியாய விலைக் கடையின் அரிசிகளை கடத்தி வந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து 2 டன் நியாய விலைக் கடையின் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.