ராமநாதபுரத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கொத்தர் தெருவில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் ராமநாதபுரம் யானைக்கல் வீதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த மின்சார ஒயர் அவர் மீது உரசி மின்சாரம் தாக்கியுள்ளது.
அதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் கார்த்திக்கை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.