நண்பர்கள் இணைந்து ரவுடியை கொலை செய்து விட்டு ஆற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் நவீன் குமார் என்ற ரவுடி வசித்து வந்துள்ளார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட நவீன்குமார் கடந்த மாதம் 31-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது தந்தை கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரின் நண்பர்களான சந்திரமோகன், விஜயகுமார், கோவில்பிள்ளை, சங்கர், மணிமாறன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றான் நவீன் குமார் அவர்களுடன் இணைந்து கொள்ளிடம் ஆற்றின் படித்துறையில் அமர்ந்து மது குடித்துள்ளார்.
அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது ஏற்கனவே உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக நவீன் குமார் மீது கோபத்தில் இருந்த கோவில்பிள்ளை அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதன் பிறகு நண்பர்கள் 5 பேரும் இணைந்து நவீன் குமாரை சரமாரியாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து நண்பர்கள் இணைந்து நவீன்குமாரின் உடலை ஆற்றில் குழிதோண்டி புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடித்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த நவீன் குமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.