செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பள்ளியில் சிவசங்கர் பாபாவின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை திறந்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பள்ளியில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய “ஆபாச சாட்” சிக்கி உள்ளது என்றும், அதில் மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இ-மெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். இந்த விசாரணையின்போது சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் விசாரணை முடிந்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.