நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் தனது தரப்பு விளக்கத்தை சரியான நேரத்தில் தராத காரணத்தினால் உயர்நீதிமன்றம் மம்தா பானர்ஜிக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது, `நாரதா நியூஸ்’ எனும் இணையதள ஊடகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் போலி நிறுவன அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதைப் போன்ற வீடியோக்கள் வெளியாகின. `நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் பெயரில் தெஹல்கா ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் மேத்திவ் சாமுவேல் நடத்திய இந்த அண்டர்கவர் ஆபரேஷனில், தன்னை ஒரு தொழிலதிபர் என்றும், தன்னுடைய இம்பெக்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்துக்கு ஆதரவாக சில வேலைகள் செய்து தருமாறும் கூறி திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் கொடுத்து, அதைத் தங்களின் ரகசிய கேமராவில் பதிவுசெய்தனர்.
அந்த வீடியோக்களை naradanews.com என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டு, 2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து மம்தா பானர்ஜி இடம் விளக்கம் கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. ஆனால் மம்தா தரப்பிலிருந்து சரியான நேரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக மம்தாவுக்கும் அம்மாநில அரசுக்கும் ரூபாய் 5,000 அபராதம் விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.