கார் தீப்பிடித்து எரிந்ததால் தச்சு தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் சுனில் குமார் என்ற கால் டாக்சி டிரைவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில் குமார் தச்சுத் தொழிலாளியான அர்ஜூனன் என்பவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சூளைமேடு நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த கார் வடபழனி 100 அடி சாலையை நோக்கி மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது திடீரென காரின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. மேலும் காரில் அமர்ந்திருந்த அர்ஜுனன் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரின் உடலிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுனில்குமார் காரை நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கி சாலையில் உருண்டு தன் மீது பற்றிய தீயை அணைத்து விட்டார்.
இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் காருக்குள் இருந்த அர்ஜுனன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அர்ஜுனனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தச்சுத் தொழிலாளியான அர்ஜுனன் கார் டிக்கி பகுதியில் தின்னர், வார்னிஷ் போன்றவற்றை வைத்திருந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.