மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்ததோடு தப்பிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நடராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பால்பாண்டியன் என்ற மகன் இருக்கின்றார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தங்கதுரை என்பவரும் இணைந்து விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டியன் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரும் தங்களின் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி ஒரே மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியில் நான்கு பேர் மது குடித்து விட்டு பால்பாண்டியன் மற்றும் தங்கதுரை சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திடீரென்று சாலையின் நடுவில் நிறுத்தி அவர்களிடம் இருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் 1,500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்பாண்டியன் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கீழாம்பூர் பகுதியில் வசிக்கும் கருத்தப்பாண்டி என்பவரை கைது செய்து விசாரித்த போது கருத்தப்பாண்டி மற்றும் அவரின் நண்பர்கள் 3பேரும் இணைந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தப்பிச்சென்ற மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.