பெங்களூருவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் சிக்ஸ் பேக் வரவழைப்பதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 7 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் பலரும், உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர். சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக வொர்க் அவுட், டயட் போன்றவற்றை முயற்சி செய்கின்றனர். இதில் பல உடற்பயிற்சி கூடங்கள், உடலை கட்டுக்கோப்பாக மிக விரைவில் கொண்டு வந்துவிடுவோம் எனக்கூறி இளைஞர்களிடம் இருந்து பணத்தைப் பறித்து மோசடி செய்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்யும் கவுசிக் என்பவரிடம் பயிற்சியாளர் மோகன் என்பவர் கட்டுக்கோப்பான உடற்கட்டை மூன்று மாதத்தில் வரவழைப்பதாக கூறி ரூபாய் 7 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். மூன்று மாதமாகியும் உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், பணத்தை திரும்ப தரும்படி மோகனிடம் கேட்டுள்ளார். அதற்கு பணத்தைத் தர முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதனால் கவுசிக் போலீசில் புகார் அளித்துள்ளார்.