கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக கடந்த நான்கு நாட்களில் 134 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும் குளிர்ச்சியான இடங்களுக்கு இடம் பெறுமாறு மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநில தலைவர் ஜான் ஹோர்கன் தெரிவித்ததாவது: “இது நாங்கள் எதிர்பாராத வெப்ப அலை. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.