சொத்து தகராறு காரணமாக கூலி தொழிலாளியை அடித்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்குச்சிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகிராமன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசக்தி, ஜெயசக்தி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் ஜானகிராமனின் உறவினரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரதராஜன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் ஜானகிராமனுக்கும் வரதராஜனுக்கும் இடையே பூர்வீகச் சொத்து காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மந்தக்கரையில் உள்ள ரேஷன் கடை அருகே ஜானகிராமன் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வரதராஜன் அவரை வழிமறித்து சொத்தை பங்கு பிரிப்பது குறித்து பேசியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வரதராஜன் ஜானகிராமனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜானகிராமன் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வரதராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.