அணைக்கட்டு அருகில் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகங்கநல்லூர் கிராமத்தில் ராணி என்பவர் வருகின்றார். இவருடைய மகன் மகி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி அருணாதேவி தாய் ராணி அம்மாள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அருணா தேவியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி ராணி அம்மாள் மற்றும் அவரது மகன் சசிகுமார், அவரது நண்பர்கள், கார்த்திக்கை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதனால் படுகாயமடைந்த இருதரப்பினரும் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகாரின்படி கார்த்திக், சசிகுமார் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கார்த்திக் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பாபு, அபிலேஷ் ஹரிதாஸ், சம்பூர்ணம், வேலு ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தகராறில் ஈடுபட்டு படுகாயமடைந்த வேலு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அடிதடி வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏதும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.