வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள மோட்டூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன், உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் குழுவினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டூர் பிரசாந்த்நகர் 3-வது தெருவில் ஆட்டோ, மினி லாரியில் இருந்து 2 பேர் மூட்டைகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டு சென்றனர்.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் ஆட்டோ, மினி லாரியில் இருந்த மூட்டையை பிரித்து சோதனை மேற்கொண்டதில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயன்ற 2 பேரையும் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதன்பின் அந்த வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்ததில் மறைத்து வைத்து இருந்த ரேஷன் அரிசி என மொத்தம் 60 மூட்டையில் இருந்த 3 டன் ரேஷன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கன்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 2 பேரிடமும் உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலூர் கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த மினிலாரி உரிமையாளர் ராமச்சந்திரன், சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் இம்ரான் என்பது தெரியவந்தது.
இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை பெற்றுகொண்டு சட்டவிரோதமாக வெளி மாநிலத்திற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அதன்பின் ஆட்டோ மற்றும் மினி லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபகிடங்கில் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவுப் பொருள் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், இம்ரான் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.