இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தென்னந்தோப்பில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து இறந்து கிடந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணுவாக இருக்கலாம் என காவத்துறையினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரின் சகோதரரான அர்ஜுனை அழைத்து இறந்து கிடப்பவர் சின்னக்கண்ணு தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் மருத்துவமனையில் வைக்கப்பட்ட உடலை பார்த்த பிறகு அவரது குடும்பத்தினரும் இறந்தது சின்னக்கண்ணு தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து சின்னக்கண்ணு உயிரோடு இருப்பதாகவும், தேவகோட்டை அருகில் உள்ள ஒரு இரும்பு கடையில் சின்னக்கண்ணு வேலை செய்வதாகவும் அவரது குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சின்னக்கண்ணுவை அழைத்து வந்து மூன்று சக்கர வாகனத்தில் அமர வைத்து ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்து கிடந்த நபர் யார் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.