தடுப்பூசி செலுத்துவதற்கு இணையத்தள பதிவு தொடங்கி 15 நிமிடத்தில் டோக்கன் முடிந்ததால் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 658 நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருவதனால் இதனை கட்டுப்படுத்துவதற்காக https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தின் மூலம் டோக்கன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு 16 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. அதன்பின் நாகர்கோவில் டதி பள்ளியில் மட்டும் பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன் பெறுவதற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மாவட்டம் முழுவதிலும் 6 இடங்களில் இணையதளம் மூலம் டோக்கன் பதிவு செய்து தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 6 மணிக்கு இணையதள பதிவு தொடங்கி 15 நிமிடத்தில் 1,840 டோஸ் மருந்துகளுக்கான பதிவு டோக்கன் முடிவு பெற்றது.
இதனால் சில பேருக்கு டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனைத்தொடர்ந்து ஆன்லைன் மூலம் டோக்கன் பதிவு செய்த 110 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததனால் முகாம்களில் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. இதில் மீதமுள்ள தடுப்பூசி மருந்துகள் பதிவு முயற்சிக்கு தாமதமாக வந்தவர்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் மருத்துவமனையில் வழங்கும் டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பொதுமக்கள் காலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவ்வாறு ஒரே நாளில் 27 முகாம்களில் மொத்தம் 5 ஆயிரத்து 140 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.