வரதட்சணை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் வனத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் மலர் கொடியின் பெற்றோர் வனத்துரைக்கு வரதட்சணையாக கொடுக்கவேண்டிய நகை, பணம் போன்றவற்றை கொடுக்காததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வனத்துரை சேத்தூர் பகுதியில் வசிக்கும் தனது மாமனார் வீட்டில் தனது மனைவி, குழந்தையை கொண்டுபோய் விட்டு வரதட்சணையை கொடுத்த பிறகு வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அதன்பின் வனத்துரை தனது குடும்பத்தினரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதனையடுத்து வனத்துரைக்கும், மலர்கொடிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்கையை வெறுத்த கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். அதன்பின் அருகில் உள்ளவர்கள் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மலர்க்கொடியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மலர் கொடியின் தந்தையான சிங்கராஜ் சேத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.