ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு இன்னும் 17 நாட்களில் குடி நீர் திறந்துவிடப்படும் என்று கங்கை திட்டம் கண்காணிப்பு [பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிலவி வரும் தொடர் தண்ணீர் பஞ்சம் சென்னையை சுற்றியுள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் குடிநீரை பெற முடியாமல் சென்னைவாசிகள் திண்டாடினர். இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நீரை தமிழக அரசாங்கம் சென்னைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சில மாதங்களுக்கு முன்பாக வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதில் ஓரளவுக்கு சென்னை மக்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து முழுவதுமாக தண்ணீர் பஞ்சத்தை நீக்குவது குறித்து தொடர் ஆலோசனை நடைபெற்று வந்தது.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு இன்னும் 17 நாட்களில் குடிநீர் திறந்த விடப்படுவதாக தெலுங்கு கங்கை திட்டம் கண்காணிப்பு பொறியாளர் வெங்கடேஸ்வர ராவ் திருப்பதியில் பேட்டி அளித்தார். அதில் ஸ்ரீசைலம் அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்றும் சோமசீலா அணையில் தற்போதைய நிலவரப்படி 13 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்த வெங்கடேஷ்வராவ் தமிழகத்திற்கு தண்ணீர் இன்னும் 17 நாட்களுக்குள் வந்து சேரும் என்று தெரிவித்துள்ளார்.