தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 2020 நவம்பரில் ரூ.610 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ .850க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களில் ரூ.240 உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசலுடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வது நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது.