நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வரும் பயணிகளுக்கு திடீரென்று கடும் கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து விமானம், பேருந்து,ரயில் மற்றும் டாக்ஸி மூலம் கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதிக்கப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்ற உறுதி செய்யப்பட்ட ஆர்டி பிசிஆர் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.