நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரம் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேலம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆடையாம்பட்டி பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதிலும் ஒரு கார் சாலை ஓரத்தில் முன்பக்க பக்கம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் 3 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஒட்டி வந்தது யார் என விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது காரை ஒட்டி வந்த மர்மநபர்கள் கார் விபதடைந்ததும் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மேலும் அந்த பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.