விளையாட சென்ற 3 குழந்தைகள் குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சண்முகாபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 5 வயதுடைய இஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 4 வயதுடைய புவன் மற்றும் 5 வயதுடைய சண்முகப்பிரியா என்பவர்களுடன் இணைந்து அங்கு அமைந்துள்ள கோவில் பகுதியில் விளையாடுவது பழக்கம். அந்த பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் சண்முகப்பிரியா, புவன் மற்றும் இஷாந்த் ஆகிய 3 பேரும் இணைந்து அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து இஷாந்த் விளையாட சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாயாரான சுகன்யா அப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.
ஆனால் அங்கு மூன்று குழந்தைகளும் இல்லாததால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுகன்யா இறுதியாக குளத்தின் பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு சண்முகப்பிரியா, புவன் மற்றும் இஷாந்தின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று குளத்தில் இறங்கி மிதந்து கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் உடலை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இஷாந்த், புவன் மற்றும் சண்முகப்பிரியா ஆகியோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மூன்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 3 குழந்தைகளும் கோவில் பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக குளம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் குளத்தில் உள்ள தண்ணீரை பார்த்தவுடன் அதில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவ்வாறு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பலியாகிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.