சட்டவிரோதமாக விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்புத்தக்க போதை மாத்திரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு முகவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒரு பார்சலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தது. அந்த பார்சல்களில் வாழ்த்து அட்டை இருப்பதாக குறிப்பிடபட்டிருப்பதை கண்டு அதிகாரிகள் சந்தேகமடைந்து அதனை பிரித்து பார்த்துள்ளனர்.
அப்போது அதில் போதை மாத்திரை கடத்தி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புத்தக்க 105 போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அதிகாரிகள் அந்த பார்சலில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது அவை பொய்யானது என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள் கல்லூரி மாணவர்கள், வசதியுள்ள வாலிபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.