வன விலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டுகள் வைக்கப்படுவது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலங்களில் வனவிலங்குகளுக்கு வைக்கப்படும் வெடிகுண்டை வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் கடித்து காயம் ஏற்பட்டு அவற்றின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் அனுமதியின்றி வெடிகுண்டு தயாரிப்பது, பயன்படுத்துவது மற்றும் அதற்கான பொருட்களை வைத்திருப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி யாரேனும் நாட்டு வெடிகுண்டு தயாரித்தல் அல்லது அதற்கான வேதிப் பொருட்களை வைத்து இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.