திருப்பத்தூரில் சிறுபான்மையினர்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமூகத்தில் பின்னடைவில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவைச் சேர்ந்த மதவழி சிறுபான்மையினர் மக்கள் சுயதொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்காக சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த இருக்கின்றது. இந்தத் திட்டம் 1-ன் கீழ் 20 லட்சம் ரூபாய் அதிகபட்சமாகவும், 2- வது திட்டத்தின் கீழ் 30 லட்சமும் கடன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 10 லட்சம் ரூபாய் அதிகபட்சமும், சுயதொழில் குழுக்களுடன் நபர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும் இதே திட்டத்தில் நபர் ஒருவருக்கு 1 1/2 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. எனவே மாவட்டத்தில் கடன் பெற விரும்பும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும். அதன்பின் மனுக்களுடன் மதச்சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கி கூறும் இதர ஆவணங்களை கொடுக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து கல்வி கடனுக்காக விண்ணப்பிப்பவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை கொடுக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவார்கள் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்ற ஏதேனும் ஒன்றில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.