பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 6- வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாணவி தனது தாயாருடன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மகளை வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு தான் நடத்தி வரும் இறைச்சிக் கடைக்கு தாய் சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து தாய் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகளை காணாததால் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். ஆனால் மாணவி எங்கும் கிடைக்காததால் சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் தாய் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன பள்ளி மாணவி தனது வீட்டின் பின்புறத்தில் முள்புதரில் தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் பள்ளி மாணவியின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெங்கப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைதொடர்ந்து மாணவி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் சந்தேகத்தின்படி அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் “பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், அப்போது அவர் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டதால் தலையில் கல்லால் தாக்கியதில் அவர் இறந்ததில் நான் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டேன்” என்று சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்பின் சிறுவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.