ஏஜெண்டிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சங்கர்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறு வியாபாரிகளுக்கு பட்டாசு ஆலையில் இருந்து பட்டாசுகளை வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கர்ராம் ஸ்ரீவில்லிபுத்தூர் வங்கியிலிருந்து அவர் கணக்கில் உள்ள 2 லட்ச ரூபாயை எடுப்பதற்காக வந்துள்ளார். இதனையடுத்து சங்கர்ராம் வங்கியில் இரண்டு லட்ச ரூபாயை எடுத்துவிட்டு வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் சங்கர்ராமிடம் உங்கள் ரூபாய் நோட்டுகளை அங்கே விட்டு விட்டீர்கள் என்று சற்று தொலைவில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை காண்பித்துள்ளார்.
இதனையடுத்து சங்கர் ராம் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக சென்றபோது அந்த மர்ம நபர் சங்கர்ராம் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 2 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுள்ளார். இதுகுறித்து சங்கர்ராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.