தேனி மாவட்டத்தில் பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2000க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் ரவி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவரது சொந்த தோட்டத்தில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ரவியின் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு தீவனப் பயிர்களுக்கு நடுவே மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்து விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அவரது நண்பரான சுரேந்தர் என்பவர் கோவாவிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி கேரளாவிற்கு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் போலீஸ் சோதனை அதிகம் இருப்பதனால் மாட்டி கொள்வோம் என்ற அச்சத்துடன் ரவியின் தோட்டத்தில் வைத்துள்ளார் என ரவி கூறியுள்ளார். மேலும் தேனி சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டுள்ளனர். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியான சுரேந்தரையும் கைது செய்வதற்கு போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளனர்.