கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள திரிகூடபுரம் பகுதியில் வசிக்கும் முகம்மது மீத்தின் என்பவர் அப்பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்கிறார் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று முகமது மீத்தின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக முகமது மீத்தினை கைது செய்துள்ளனர். மேலும் அவரின் மீது ஏற்கனவே எட்டு கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் முகமது மீத்தினை சிறையில் அடைத்து விட்டனர்.