சட்டவிரோதமாக ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடிக்கு வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி தலைமையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் உள்ள இருக்கைக்கு அடியில் தனியாக கிடந்த 4 பைகளை காவல்துறையினர் சோதனை செய்ததில் அதில் கஞ்சா பார்சல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் ரயிலில் கஞ்சா பார்சலை கடத்தி வந்தது யார் என்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 6 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் அந்த கஞ்சா பொட்டலங்களை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ரயில் மூலம் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்துவதை தடுப்பதற்காக சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.