தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் உரியக் காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடக் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்கிடவேண்டும்.
பொது விநியோகத்திட்டத்தை முழுவதுமாக கணினிமயமாக்குதல். நியாயவிலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டுவருதல். பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதை இணைய வழியில் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன், மானிய விலையில் உரம் மற்றும் விவசாய இடு பொருட்கள் வழங்குதல் போன்றவற்றை உரியக் காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.