மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி மோட்டார் சைக்கிள் திருடும் மர்ம நபர்களை பிடிப்பதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா உத்தரவின்படி, அந்தப் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பழனி புதுநகர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி மோட்டார் சைக்கிள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் படி 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பழனி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல், பழனி மதினாநகரை சேர்ந்த ஹபீப் ரகுமான் மற்றும் 18 வயதுடைய ஒரு சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பழனி ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை, திருச்சி மாவட்டம் போன்ற பல்வேறு பகுதிகளில் இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 11 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.