மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயலூர் குடிக்காடு கிராமத்தில் தங்கராஜ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பிரதீப் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமாக ஆஸ்பெடடாஸ் கூரையுடன் கூடிய வீடு இருக்கின்றது. அதில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்களின் மேல் வயரில் மின் விளக்கு பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது வயரில் தண்ணீர் பட்டு மின் கசிவு ஏற்பட்டதால் இரும்புக் குழாய்களில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.
இந்தக் குழாய்களில் துணி போடுவதற்காக கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்தது அறியாமல் தங்கராசு துணியை எடுத்துள்ளார். அப்போது தங்கராசு உடலில் மின்சாரம் பாய்ந்து சத்தம்போட்டதால் அவரது மனைவி சித்ரா, மகன் பிரதீப் ஆகியோரும் அவரை காப்பாற்ற கம்பியை பிடித்துள்ளனர். இதனால் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பிரதீப் கை கால் முறிவு ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் சித்ராவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.