மனைவி திட்டியதற்கு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தெய்வகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அவரின் மனைவியான தெய்வகனி இவ்வாறு மது குடித்துவிட்டு இங்கு வரக்கூடாது என்று அவரை திட்டி உள்ளார். இதனையடுத்து கோபமடைந்த பாண்டியன் அப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்றுகொண்டு இங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று அவரிடம் கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் அதற்கும் அவர் கீழே இறங்கி வர மறுப்பு தெரிவித்து விட்டார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பாண்டியனே செல்போன் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டார். அதன் பிறகு பாண்டியனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அதற்கு அவர் தனது மனைவி தன்னை மது குடிக்கக் கூடாது என்று திட்டியதால் கோபத்தில் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட காவல்துறையினர் அவர் உனது நன்மைக்காக கூறியிருக்கிறார். இவ்வாறு இனிமேல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.