300 நபர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. எனவே கொரோனாவின் 3-வது அலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதை பொருத்து முகாம்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து பொதுமக்களும் கொரோனாவின் தாக்கத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைபூண்டி மீனாட்சி வாய்க்கால், நாடார் தெரு, அபிஷேக கட்டளை தெரு, அரியலூர், தோப்புத்தெரு, நாகைரோடு, தைக்கால் தெரு, வசந்த மஹால் அரங்கு போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் பெரும்பாலானோர் அங்கு குவிந்தனர். ஆனால் முகாமில் 300 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் பெரும்பாலானோர் ஏமாற்றத்தில் திரும்பினர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய அளவு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.