இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு 1 அல்லது 2 டோஸ் கோவிஷில்டு தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் டெல்டா வைரஸில் இருந்து பாதுகாக்க 1 டோஸ் போதுமானது என தெரிவித்துள்ளது.