ஓடி கொண்டிருக்கும்போதே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது காரில் பழநிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் வேடசந்தூர் – வடமதுரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனைப் பார்த்து மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து கீழே இறங்கிய சற்று நேரத்தில் காரானது தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து மணிகண்டன் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.