இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தேசிய தடுப்பூசி ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இனி வெளிநாடுகளுக்கு தடை இன்றி பயணம் செய்ய இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.