மது குடிக்க பணம் தராததால் பெண் வங்கி மேலாளரை கணவன் சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பாடி பகுதியில் அச்சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கிளை மேலாளராக பணி புரிந்த மனோ பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அச்சுதன் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் கோபம் அடைந்த அச்சுதன் வீட்டில் இருந்த சுத்தியலால் மனோ பாரதியின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மனோ பாரதியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோ பாரதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அச்சுதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.