பழுதான துப்பாக்கியை விமானம் மூலம் அனுப்ப முயன்ற டாக்டர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் பிஸ்டல் துப்பாக்கியை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பழுதான துப்பாக்கியை கூரியர் பார்சல் அனுப்ப டாக்டர் சாமுவேல் முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து கூரியர் நிறுவனத்தினர் அந்த பார்சலில் துப்பாக்கி இருப்பது தெரியாமல் கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அதனை அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதன் பின் விமான நிலைய அதிகாரிகள் கூரியர் பார்சல்களை சோதனை செய்த போது அதில் துப்பாக்கி இருப்பதை கண்டு அந்த நிறுவனத்தினரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் அதிகாரிகள் டாக்டர் சாமுவேலையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி முருகன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முறையான தகவல் தெரிவிக்காமல் கூரியர் பார்சல் மூலம் துப்பாக்கியை விமானத்தில் அனுப்பி வைக்க முயன்ற குற்றத்திற்காக டாக்டர் சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.