முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி புதுக்காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த ராமதாஸ், இவரது மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் போன்றோர் புதுகாலனிக்கு செல்லும் சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ராமதாசிடம் கேட்டபோது எனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைந்து இருப்பதாகவும், உறவினர் இறந்து விட்டதால் இந்த சாலை தனக்கு சொந்தமானது என்பதால் முட்செடிகள் அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கள்ளக்குறிச்சி- வேப்பூர் சாலையில் புதுகாலனி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலையின் குறுக்கே போட்பட்டிருந்த முட்செடிகளை அகற்றினர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.