சுட்டெரிக்கும் வெயிலால் கனடாவில் 719 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் மேற்கு பிராந்தியத்தில் குறிப்பாக கொலம்பியா பிரிட்டிஷ் மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் இதுவரை இல்லாத வகையில் லிட்டன் என்கிற கிராமத்தில் 49.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொலம்பியா பிரிட்டிஷ் மாகாணத்தில் இந்த கடும் வெயில் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெயிலால் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மரணித்து கொண்டே வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி 7 நாட்களில் கொலம்பியா பிரிட்டிஷ் மாகாணத்தில் 719 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் லிட்டன் கிராமத்தில் இந்த வெயிலால் 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த காட்டுத்தீயால் பெரும் அளவில் பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.