தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டஙக்ளுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையையும் பேருந்து போக்குவரத்து அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் குளிர்சாதன வசதி உள்ள பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.